இதுவரை சொன்னதில்லை..

21 09 2009

எனக்கு புத்தகங்களின் மேல் ஏன் இவ்வளவு ஆவல்? இதன் தொடக்கம் எப்போது ஆரம்பித்தது? யோசித்து பார்த்தேன்..

அய்யய்யோ.. நிறைய உண்மைங்க வெளிவரும்போல இருக்கே.. சரி ஆரம்பிச்சாச்சி.. முடிச்சிடறேன்..

என்னோட மணி அண்ணன், வேணு அண்ணன் இரண்டு பேருமே அப்ப காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க.. நான் 6 – ஆவது படிச்சிட்டு இருந்தேன். என்னடா இது, இவ்வளவு வயசு வித்யாசமானுதானே யோசிக்கறீங்க.. அவங்க ரெண்டுபேருமே என் அப்பாவோட தம்பிகள்தாங்க. என்னோட அத்தை அவங்கள அண்ணா,அண்ணான்னு கூப்பிடறத பாத்து நானும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சி விவரம் தெரிஞ்ச பின்னாலும் மாத்திக்க முடியாம அதுவே பழகிடுச்சிங்க..

6 – வது முழு ஆண்டு தேர்வு நடக்க ஆரம்பித்த நேரம் அது. அப்பதான் அண்ணன்களும் லீவ்ல ஊருக்கு வந்தாங்க. எனக்கு கணக்கு போட்டு பார்க்க ஒரு நோட் தேவைபட்டது. சரி அவங்க அலமாரில ஏதாவது இருக்குமான்னு தேடப் போனேன். அங்கதான் முதன்முதலா மினுமினுப்பான அட்டைகளோட குட்டி குட்டியா (துப்பறியும் நாவல்) நெறைய புத்தகங்கள பார்த்தேன்.மேலயே இருந்த ஒரு புக்கோட அட்டைபடம் வேற அழகான முயல் படம் போட்டிருந்ததா..! அந்த மாதிரி புத்தகங்களை அதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லீங்க. ஆனா அது அண்ணனங்களோட காலேஜ் புத்தகம் இல்லேன்னு மட்டும் கண்டுபிடிச்சிட்டோமில்ல! :)

நான் அப்ப இருந்தது ஒரு கிராமத்துல தாத்தா பாட்டியோட, அதிலும் வசதிகள் இருந்தாலும் படிச்சவங்க யாரும் பக்கத்துல கிடையாதா.. படிக்கற புத்தகங்கள் தவிர வேற எதையும் பார்க்க படிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. தாத்தா கடைக்கு போய் எதாவது பொருள் வாங்கிட்டு வந்தா எனக்கு என்ன வாங்கி இருக்காங்கன்னு பார்க்கறேனோ இல்லையோ? அத கட்டி குடித்த பேப்பர்லதான் என் கண்ணு இருக்கும். அதுல என்னென்ன இருக்கோ அத்தனையையும் புரியலனாலும் படிச்சிடுவேன். அப்ப தான் எனக்கு தூக்கமே வரும்.

இத பார்த்ததும் ஒரே சந்தோசம். சரி எடுத்து பார்க்கலாம்னு கையை வச்ச நேரம் பார்த்தா மணீ அண்ணா வரனும். “என்ன வேணும்மா” ன்னு கேட்டாரு.. “நோட்டு ஒன்னு வேணும்ணா”ன்னு சொல்லிட்டு நாவல்களை காட்டி “இதெல்லாம் என்ன புக்ணா” ன்னு தெரியாத மாதிரி கேட்டேன். அதுக்கு “இதெல்லாம் பெரியவங்க படிக்கற புக்மா, உனக்கு புரியாது, நீ போய் படி” ன்னு சொன்னத கேட்டு புக்க பாத்துக்கிட்டே ” ஏன் நான் படிச்சா என்ன? நானும் பெரிய பொண்ணுதானே.. ஸ்கூல் – ல நாந்தான் கொடிப்பாட்டு பாடறேன், தெரியுமா? ன்னு கேக்கறேன். பின்னாடி சத்தமே இல்ல. அப்புறம்தான் தெரிஞ்சது அவரு அப்பவே போய்ட்டாருன்னு.

எனக்கு மூக்குமேல கோபம் வந்துருச்சி, அதெப்படி எனக்கு புரியாம போகும் ? நானுந்தான் கிளாஸ்ல பெஸ்டு ஸ்டூடண்ட், என்ன.. இங்லீஷ் தான் சரியா படிக்க தெரியாது, இது தமிழ்தானே ஏன் புரியாது? அப்படி என்ன இருக்கு அதுல? படிக்காம விடறதில்லைன்னு முடிவு செஞ்சி… முடிவு செஞ்சி.. ஒன்னே ஒன்ன மட்டும் சுட்டுகிட்டு வந்துட்டேன்.

நான் வழக்கமா படிக்கற வேப்பமரத்து நிழல்ல ஒக்காந்து அட்டைய சந்தோசமா பார்த்துட்டு படிக்கலாம்னு புக்க பிரிச்சி பார்த்தா எழுத்தெல்லாம் தலைகீழா இருக்கு.. அப்பதான் தெரிஞ்சது அதுவரைக்கும் நான் பின் அட்டையத்தான் பார்த்திருக்கேன்னு..அட சேன்னு தலைல அடிச்சிக்கிட்டு முன் அட்டைய திருப்பி பார்க்கறேன்.. இஈஈஈஈஈஈ… ன்னு ஒரு கொரங்கு இளிச்சிட்டு ஒக்காந்திருக்கு.ஒரு ஆளு வேற ரெத்தத்தோட பயந்துகிட்டு படிகட்டுமேல ஓடரமாதிரி படம் போட்டு இருக்கு. அப்படியே ஒரு நிமிசம் திக்குன்னுதான் இருந்தது. ஆனாலும் அதபடிக்காம விடமாட்டோமில்ல! :) அதுவும் கொரங்கு கதைவேற..!

அந்த நேரத்துலையும் ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது.

படிக்கும்போதே ஒரே யோசனைதான். ஒரு எடத்துலகூட குரங்கே வரமாட்டேங்குதேனு.. ஆனாலும் பிடிவாதமா ஒரு 20,25 பக்கம் படிச்சதுக்கப்புறம் தாங்க புரிஞ்சது, புக்கோட ஹீரோவே அந்த கொரங்குதான். பக்கத்துக்கு பக்கம் அது பேர்தாங்க. அது பேரு சிம்பன்சி. சிம்பன்சின்னு இருந்ததால அது யாரோ ஒரு ஆள் பேர்ன்னு..ஹி..ஹி.. :)

இதுல என்ன காமெடினா ஓ.. அந்த புக்ல வர கொரங்குக்கு சிம்பன்சின்னு பேர் வெச்சிருக்காங்க போல இருக்குன்னுதாங்க நினைச்சேன். கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம்தாங்க சிம்பன்சின்னு ஒரு கொரங்கே இருக்குன்னு தெரிஞ்சது.

ஏதோ உறுத்தல்னு சொன்னேனில்லையா.. “அந்த அட்டைப்படத்துல இருக்கற கொரங்க ஏன் இவ்வளவு அசிங்கமா போட்டிருக்காங்க. கருப்பா இவ்வளவு முடியோட இருக்கே. கொரங்கு கொஞ்சம் அழகாத்தானே இருக்கும்”. ன்னு தோணிட்டே இருந்தது. அப்புறம் தானே தெரிஞ்சது.. கொரங்குக்கெல்லாம் கொள்ளுத்தாத்தா கொரங்கு இவருதான்னு. இந்த சார் பேர்தான் சிம்பன்சின்னு. ஆனாலும் சார் எப்பவுமே கொஞ்சம் அழகுதான் இல்லீங்க..! அதுவும் சிரிக்கும்போது அப்பப்பா….

அப்புறம் அந்த புக்க என் பைகுள்ளையே வெச்சிட்டு இருந்தேனா.. கணக்கு பரிட்சை அன்னிக்கு மணி அண்ணா சொல்லிகொடுக்க என்கிட்ட வந்து ஒக்காந்தாங்களா.. எப்பவும் போல நான் புக் எடுக்க பையை எடுத்தேனா.. அவரு பார்த்துட்டாரு.. பார்த்ததும் கொபம் வந்திருச்சிபோல இருக்கு.. சுத்திமுத்தி பார்த்துட்டு நங்’னு என் தலமேல ஒரு கொட்டு வெச்சிட்டாரு. நான் வழக்கம்போல சத்தமா அழுதேனா.. (அப்படி அழுதாத்தான் புயல்மாதிரி பாட்டி, தாத்தா யாராவது வருவாங்க, வந்து அண்ணன நல்லா திட்டிட்டு என்னைய எதாவது சாப்ட கூட்டிட்டுபோயிடுவாங்க.. அண்ணன் தலைல அடிச்சிக்கும். அவளை செல்லம் குடுத்து கெடுக்காதீங்கன்னு சொல்லிட்டே எழுந்து போயிடுவாரு. அப்பாடின்னு இருக்கும். பின்ன என்னங்க.. எது தெரியாத கணக்கோ அத தாங்க போடச்சொல்லி தெரியலன்னு திட்டுவாரு. தெரிஞ்சத போட சொல்லவே மாட்டாரு.. கோபம் வருமா வரதா.. நீங்களே சொல்லுங்க..) அட! யாருமே வரவே இல்லீங்க. பக்கத்துல யாருமே இல்லன்னு கன்பார்ம் பன்னிட்டுதான் அடிச்சே இருக்காருன்னு அப்புறமாதானே புரிஞ்சது.

அப்புறம் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்ததும் சமாதானப்படுத்தர மாதிரி, “பரிட்சை எல்லாம் முடிஞ்சதும் நீ எடுத்து படிச்சா யாரு வேண்டாம்னு சொன்னது” னு சொல்லிட்டு கண்ண தொடச்சிவிடாரா.. ” நீங்கதான் அதுக்குள்ள எடுத்துட்டு போயிடுவீங்களே” னு அழுதுட்டே சொன்னதும் என்ன நெனச்சி சிரிச்சாருன்னு தெரியல.. சிரிச்சிட்டே “இல்ல, எல்லாத்தையும் இங்கயே வெச்சிட்டு போறேன்”னு சொல்லிட்டு எழுந்துபோய்ட்டாரு..

ஒருவாரம் எப்படா இந்த பரிட்சை எல்லாம் முடியும்னு அலுத்துக்கிட்டே எழுதி முடிச்சிட்டு மதியம் வந்ததும் வராததுமா எல்லாத்தையும் எடுத்து என் எடத்துல அடுக்கி வச்சிட்டுதான் சாப்பிடவே போனேன். அப்புறம் ஒவ்வொன்னா எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். அடித்த ஆறுமாசம் அண்ணா லீவ்ல வர வரைக்கும் அதையெல்லாம் திரும்ப திரும்ப எத்தனை முறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது. அதுதான் என்னோட ஆரம்பம்.. புத்தகம் படிக்க எனக்கு பிடிக்கும்னு எனக்கே தெரியவச்ச ஒரு சின்ன நிகழ்ச்சிதான் இது. நிகழ்ச்சி சின்னதா இருந்தாலும் என் வாழ்க்கைல இது ரொம்ப முக்கியமான நிகழ்ச்சி.

இதுக்கு முதல் காரணமான என் அண்ணாவுக்கு இதுவரைக்கும் நான் ஒரு நன்றி கூட சொன்னதில்லையேன்னு இப்ப தோணுது . இனிமேல் சொல்ல முடியுமான்னும் தெரியல.. ஏன்னா எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும்னோ, கொஞ்சம் எழுதவும் செய்வேன்னோ என் அண்ணாக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏதாவது சந்தர்பத்தில் இந்த பதிவை எப்பவாவது படிக்கற வாய்ப்பு இருந்து அவரும் இதை படிச்சார்ன்னா நிச்சயமா என்னோட உணர்வை புரிஞ்சிப்பாருன்னு நினைக்கிறேன்.

ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா!
எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினதுக்கு..


செயல்கள்

தகவல்

5 பதில்கள்

22 09 2009
Karthikeyan

இந்த பதிவு எனக்கு பிடித்திருந்தது.
இதை படித்த பிறகு எனக்கும் சிறுவயது நினைவுகள் வந்தது.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் தினமலர்- சிறுவர் மலரில் “உயிரைத் தேடி” என்ற படக்கதை தொடராக வந்தது.அதை படிப்பதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.வெள்ளிக் கிழமை நூலகம் விடுமுறை என்பதால்,சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்பாகவே நூலகம் அடைந்து காத்திருந்து படித்து விடுவேன்.அப்போது புத்தகங்கள் வாங்கி படிக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இருக்காது.
என்னுடைய நண்பன் வீட்டில் பூந்தளிர் மற்றும் அம்புலிமாமா வாங்குவார்கள்.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை இரவல் வாங்கி படித்து விடுவேன்.
அப்போது ஏற்பட்ட ஆர்வம் இன்று வரை குறையவில்லை.வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
முதலில் என்க்கு அறிமுகமான எழுத்தாளர் பாலகுமாரன்.சரவணன் என்ற நண்பர் பாலகுமாரனை அறிமுகம் செய்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,நண்பர் வெகுநாட்களுக்கு முன்பே படிப்பதை நிறுத்தி விட்டார்.ஆனால் என்னுடைய ஆர்வம் குறையவில்லை.

சகமனிதர்கள் காயப்படுத்தும் போது புத்தகங்கள் மட்டுமே எனக்கு மருந்தாய் இருந்திருகிறது.

22 09 2009
kapilashiwaa

//இதை படித்த பிறகு எனக்கும் சிறுவயது நினைவுகள் வந்தது.//
நான் இந்த பதிவை போடுவதின் முக்கிய நோக்கமே நாம் மறந்து விட்ட, மறந்துவிட்டதாக நினைக்கும் சிறுவயது நிகழ்ச்சிகளை நினைவுப் படுத்திக்கொள்ளத்தான்.. முதல் நபராக நீங்கள் இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி..

//சகமனிதர்கள் காயப்படுத்தும் போது புத்தகங்கள் மட்டுமே எனக்கு மருந்தாய் இருந்திருகிறது.//
100 – ல் ஒரு வார்த்தை கார்த்திகேயன்.

நன்றிகள் பல.. மீண்டும் சந்திப்போம்.

22 09 2009
ஹேமா

வணக்கம் பிரேமா.(உங்க பேர் கண்டுபிடிச்சிட்டேன்) இவ்ளோ அழகான பெயரை வச்சிக்கிட்டு ஏன் பெயர் சொல்லாம வந்திட்டுப் போனீங்க.என் தங்கை பெயரும் ஹேமலதா.
சரி இனிப் பெயரோட வாங்க.

பதிவுகள் சில பார்த்தேன் பிடிச்சிருக்கு.அடிக்கடி இனி வரலாம்.லதா ,கவிதை அனுமதி கேட்டிருந்தீங்க.அனுமதி தந்தேன்.சந்தோஷமா !

//“அந்த அட்டைப்படத்துல இருக்கற கொரங்க ஏன் இவ்வளவு அசிங்கமா போட்டிருக்காங்க. கருப்பா இவ்வளவு முடியோட இருக்கே. கொரங்கு கொஞ்சம் அழகாத்தானே இருக்கும்//

அதானே நாங்களெல்லாம் எவ்ளோ அழகு.யார் இல்லன்னு சொன்னது பிரேமா !

23 09 2009
kapilashiwaa

வணக்கம் ஹேமா.. அழகான பேர்ன்னு சொன்னதுக்கு நன்றி.. என்னை என் தோழிகள் பிரேம்ஸ் – ன்னு கூப்பிடுவாங்க. ஆனா நான் +2 படிக்கும்போது பட்ட அவஸ்தை இருக்கே அது ரொம்ப பெரிய சோகக்கதைங்க (எல்லாம் இந்த பிரேமாநந்தா சாமியாரால வந்த வினைங்க,அந்த நாள்ல எந்த புக்ல பார்த்தாலும் பிரேம்ஸ் ன்னு தான் அவனை எழுதியிருப்பாங்க.)

உங்க அனுமதிக்கு ரொம்ப நன்றி.

நல்ல வேளை! நாமெல்லாம்னு சொல்லாம விட்டீங்களே! மீண்டும் சந்திக்கலாம் ஹேமா.

26 12 2010
ஜெகதீஸ்வரன்

ஆறாவது படிக்கும் போதே நீங்கள் அறிவு சார்ந்த தேடலை அறிந்து வியப்பு மேலிடுகிறது. நிறைய புத்தகங்களை எங்களுக்கு அறிமுகம் செய்யலாமே!…

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.