இந்த தலைப்பை படிச்சதுமே ஆட்டோகிராப் – சேரன் சாரோட படம் தான் ஞாபகம் வரும் – ஆழமான உணர்வுகளை அழகா எடுத்து காட்டிய படம். அப்படி பார்த்தா நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் ஒரு ஆட்டோகிராப் தான் இல்லையா?.
நாம சின்ன வயசுல நடந்துகிட்ட சில விசயங்களுக்கும் (அட சில என்னங்க சில,பல விசயங்களுக்கும்) நம்ம பெத்தவங்களோ, சொந்தகாரங்களோ, வாத்தியாருங்களோ, அவங்க கோணத்துல இருந்து ஒரு காரணம் கண்டுப்பிடிச்சி சொல்லுவாங்க. இதனாலதான் இப்படி நடந்துகிட்டான், அதனாலதான் அப்படி நடந்துகிட்டாள்னு.. ஆனால் பெரும்பாலும் அது ஒரு யூகமாதாங்க இருக்கும்.
பெரும்பாலான பெரியவங்க எல்லாரும் “நீங்க சின்னவங்க, உங்களுக்கு என்ன தெரியும்” அப்படீன்னு சொல்லிக்கிட்டு “தப்பு பன்னா அடி விழும்” ன்ற பயத்த மட்டும் உண்டாக்கனும்னு நினைக்கறாங்க. அதனால ‘தொப்பு தொப்பு’ ன்னு ரெண்டு அடிய போட்டு அடக்கி ஒக்காரவெச்சிடுறாங்க.ஆனால் அந்த வயசுக்குரிய மனநிலையில யோசிக்கற நமக்கோ நாம செய்யறது தப்பாவே தெரியாது. ஏன்னா நம்மலோட கண்ணோட்டத்துல அதுக்கான காரணம் சரியாவே இருக்கும். அவங்க மேல கோபம்கோபமா வரும்.
அதே விசயத்தை நாம வளர்ந்ததுக்கு அப்புறம் யோசிச்சி பார்த்தா தலைல அடிச்சிக்கதாங்க தோணும். அப்ப சரின்னு பட்டது எல்லாம் இப்ப தப்புன்னு படும். அப்ப ஓன்னு அழுத விசயம் எல்லாம் இப்பா சிரிப்பா சிரிக்குமுங்க.
இந்த மாதிரி என்னோட சின்ன வயசுல நடந்த ஒரு சில விசயங்களை இந்த தொகுப்பு மூலமா உங்களோட பகிர்ந்துக்க ஆசைப்படுறேங்க..
உங்களுக்கும் இதுமாதிரி இருந்தா, இருந்தா என்னங்க இருந்தா கண்டிப்பா இருக்கும்ங்க.. நீங்க விரும்பின அதையும் எனக்கு சொல்லலாம்ங்க.
1) அப்ப 2 – வது படிச்சிட்டு இருந்தேன். தமிழ் வாத்தியார் பாடம் சொல்லி கொடுத்துட்டு “எல்லாரும் படிச்சிட்டு இருங்க நான் வந்து ஆளுக்கு ஒரு கேள்வி கேப்பேன், சரியா சொல்லல தோல உரிச்சி உப்புகண்டம் போட்ருவேன்” னு சொல்லிட்டு போய்ட்டார்.
அட என் பிரச்சனை அவருக்கு எங்க புரியுதுங்க. என்னோட தோழிய உயரமா இருக்கானு சொல்லி பின்னாடி லைன்ல ஒக்காரவெச்சிட்டாருங்க. எல்லாரும் கமுக்கமா பக்கத்துலையே படிக்கறமாதிரி புக்க வெச்சிகிட்டு குசுகுசுனு பேசிக்கறாங்க. நான் பேசனும்னா மட்டும் திரும்பி திரும்பி பேசனும்ங்க. அதுக்காக பேசாம இருக்க முடியுமா ? பாத்தேன்.. இது சரிபட்டு வராதுனு திரும்பி ஒக்காந்தே பேச ஆரப்பிச்சிட்டேன்.
போன வேலைய முடிச்சிகிட்டு திரும்பி வந்தவரு நேரா வரவேண்டியதுதானேங்க. சன்னல் வழியா நின்னுகிட்டு நோட்டம் விட்டிருக்காரு. அட அந்த பிசாசு புடிச்ச சன்னலு என் பக்கத்திலையா இருந்து தொலைக்கனும். வசமா மாட்டிக்கிட்டேங்க!
அதுல என்ன கொடுமைன்னா அவரு பாக்கறத பார்த்த மத்த பசங்க எல்லாம் அவரு பார்த்துட்டாருன்னு தெரிஞ்சும் படிக்கறமாதிரி தலைய குனுஞ்சி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.என்னால அத கூட பன்ன முடியலங்க. சர்வ லட்சணமா திரும்பி ஒக்காந்துட்டேனே. அதனால அவரு என்னைய பார்க்கறாருன்னு தெரிஞ்சும் திரும்பாம அவர நேருக்கு நேரா பாத்துகிட்டு அப்படியே ஒக்காங்திருந்தேன். இதுல ஒரு வசனம் வேற உள்ள ஓடுது “மத்தவங்க மாதிரி நா நடிக்கல சார்”.
கொஞ்சம்கூட அசையாம இருந்தத பார்த்ததும் பயங்கரமான கோபத்துல உள்ள வந்தவரு “எல்லாரும் படிக்கறாங்க, நீ என்ன செஞ்சிட்டு இருக்க” ன்னாரு
“நான் பேசிட்டு இருக்கேன் சார்” அப்டின்னேன். அவ்வளவு தான் அவரு முகத்துல எள்ளும் கொள்ளும் ஒரே படபட (இப்ப யோசிக்கும்போது தோணுது மனுசன் கடுப்பாயிருப்பாரு இல்ல)
“நான் படிக்க சொன்னா, படிக்காம பேசிட்டு இருந்துட்டு என்ன தைரியம் இருந்தா இப்படி பதில் சொல்லுவே கையை நீட்டு ” ன்னு குச்சில ஓங்கி அடிக்க வ்ந்தாரு. அதுக்குள்ள கையை பின்னாடி இழுத்துக்கிட்டு ” நான் படிச்சிட்டேன் சார்” னு சொன்னதும் அவரால தாங்க முடியல.. கையாவது காலாவது விலாசி தள்ளிட்டாரு போங்க..
கடைசி வரைக்கும் அவருக்கு அது தெரியாமலே போச்சிங்க. எதுன்னு கேட்கிறீங்களா? நான் நிஜமாலுமே படிச்சிட்டேன்ற விசயம்தாங்க!!
வருவித்தது