அன்பு x மெளனம்

11 06 2012

என் அன்புக்கு பாத்திரம் நீ…
அளந்து ஊற்ற மனமில்லை..
அப்படியே ஊற்றவா!?..
ஒரு ஒற்றை புன்னகையுடன்
மவுனமாக தலையசைத்தாய்!
:
:
:
ஓ…
அப்படியே ஊற்றியதால் அளவு தெரியவில்லை
சிந்திவிட்டதே என்று சிந்தை கலங்கி நிற்கின்றேன்..
நீயாவது உன் அளவை அதிகரிக்க கூடாதா?

நீர் என்றால் துணிகொண்டு துடைக்கலாம்.
மிஞ்சும் அன்பை எதை கொண்டு துடைக்க..!
நீயாவது உன் அளவை அதிகரிக்க கூடாதா?

ஏன் இந்த மெளனம்…
உன் புன்னகையற்ற முகம் என்னை குழப்புகிறது
மீண்டும் சிந்துமோ என்ற அச்சம் தடுக்கிறது..
நீயாவது என்னை திடப்படுத்தக் கூடாதா?

காட்டில் காயும் நிலவு
அளவில் மிகும் அன்பு
இரண்டுமே ஒன்றுதான்..
வீணென்று தெரிந்தாலும் விழும் இடம் மாறுவதில்லை!
தேவையின்றி விழுந்தாலும் தீர்ந்து போவதில்லை!
ஈடென்று நினைத்து எதை கொடுத்தாலும்
வேண்டும் என்பவர்களுக்கு கிடைப்பதில்லை..
வேண்டாம் என்றவர்களை விடுவதுமில்லை..

Advertisements
பிறந்த நாள் பரிசு..

10 06 2012

உனை சந்தித்த
முதல் வருடம்.. இனிப்பை நீட்டினேன்…!
ஆச்சரியத்துடன் பெற்றுக்கொண்டாய்..!
அனைவருடனும் பகிர்ந்து உண்டாய்..

அடுத்த வருடம்.. இசைக்கருவியை  நீட்டினேன்…!
ஆர்வமுடன் பெற்றுக்கொண்டாய்…!
அடிக்கடி பயன்படுத்தவும் செய்தாய்..

3 – ஆம் வருடம்…
ரோஜாவை நீட்டினேன்..! – மஞ்சள் வண்ணம்!
சிறு புன்னகையோடு பெற்றுக்கொண்டாய்..
சிறிதும்  தயங்காமல் சூடிக்கொண்டாய்..!

4 – ஆம் வருடம்…
ரோஜாவை நீட்டினேன்..! – சிகப்பு வண்ணம்!
அதே புன்னகையோடு பெற்றுக்கொண்டாய்..
சிறு தயக்கத்தோடு கைப்பையில் வைத்துக்கொண்டாய்.!?

வண்ணம் மாறியதன் அர்த்தத்தை
நீயும் கேட்கவில்லை
சூடிக்கொள்ளாததன் காரணத்தை.
நானும் கேட்கவில்லை
இன்றுவரை அதேநிலைதான்…

இது 10  – ஆம் வருடம்…
நான் தரும் பரிசும் மாறப்போவதில்லை..
நீ சிந்தும் புன்னகையும் மாறப்போவதில்லை..
ஆயினும் எனக்குள் ஒரு முள் தைக்கும் வலி..
என் ரோஜாவுக்கு என்றுமே
உன் கைப்பைதான் கல்லறையா?

 “காதலைத்தான் இப்படி சொல்லவேண்டும்” – என்று தெரிந்த உனக்கு
நட்பை எப்படியும் சொல்லலாம் என்று தெரியாமல் போனதேனோ?
என்நட்பின் மீதான உன் நம்பிக்கை வெறும்
வண்ணங்களால் முடிவுசெய்யப்படுகின்றதா?

சொல்லித்தெரிவதில்லை…
இது மன்மதக்கலைக்கு மட்டுமல்ல..!
மற்ற சிலதுக்கும் பொருந்தும்..
அதுவரை நான் தரும் ரோஜாக்களுக்கு
உன் கைப்பையே கல்லறையாக இருக்கட்டும்…

காதல் பயணங்களில் – 4

9 06 2012

4. நட்புக்காதல் – இதுகூட காதல்தான்

காற்றில் கலையும் முடிகளை சரிசெய்து
முன் நெற்றியில் முத்தமிட துடிக்கும் காதல்!
கண்ணோரம் கசியும் கண்ணீர் துடைத்து
கண்ணத்தை ஏந்தி காரணம் கேட்க துடிக்கும் காதல்!

களைத்த முகம் கண்டு கனமும் தயங்காமல்
தோல்சாய்த்து தூங்கச்செய்ய துடிக்கும் காதல்!
வாய்பேச வார்த்தைகளற்ற சில தருணங்களை
உள்ளங்கை பிடித்தே உணரத் துடிக்கும் காதல்!

“நான் வாழும் தருவாயில்
நீ என் அருகில் இருக்கவேண்டும்!
அதை வெற்றிகரமாக வாழ்ந்து பார்க்க..”
“நான் இறக்கும் தருவாயிலும்
நீ என் அருகில் இருக்கவேண்டும்!
அதை அச்சமின்றி எதிர்க்கொள்ள..”
                – மனதை சாய்க்க மடிதரும் காதல் இது!          

யாருக்கும் யவரிடமும் தோன்றும் இக்காதல்..
எப்பொழுதும் எத்தனை முறையும்  வரலாம் இக்காதல்..
பருவ மாற்றங்கள் பாதிக்காத பசுமைக்காதல்
எதிர்ப்பார்ப்புகள் இல்லாத ஏகாந்தக்காதல்.

இங்கு ஒரு கேள்வி எழும்!
நட்பை காதல் என்று ஏன் சொல்வது?

கடவுளுக்கேகூட “காதலாகி கசிந்துருகி ”
என்றபோதுதானே பக்தியின் ஆழம் புரிந்தது..
நமக்குமே “காமம் இல்லாத காதல்”
எனும்போதுதானே நட்பின் ஆழம் புரிகிறது..!

மணம் கொள்ளும் காதலுக்கு மரணம் உண்டு..
மனம் கொள்ளும் காதலு(நட்பு)க்கு அதுவும் இல்லை..
ஆத்மார்த்தமான அன்பிற்கு வேறு என்ன சொல்வது.!?

இதில்தான் நம்மனம் மயக்கத்தில் வீழ்வதில்லை!
மாறாக நம்பிக்கையை எதிர்பார்க்கிறது..

நட்புக்கும் ஸ்பரிசம் தேவை! ஆயினும்
அதை சரியாக ஆளத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படித் தெரியாதவர்களில் முடிவுதான்
நீண்டகால நட்பைகூட காதலில் முடித்துக்கொள்வது!

நட்புக்கும் ஊடல் தேவை! ஆயினும்
அதை சரியாக உணரத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படித் தெரியாதவர்களில் முடிவால்தான்
நீண்டகால நட்புகூட பிரிவில் முடிந்துவிடுகிறது!

நட்பும் காந்தம் தான்..
ஒத்த துருவங்(கருத்து)களிடம்தான் இதற்கு ஈர்ப்பு..
நட்பும் கற்பு தான்..
எண்ணிக்கைகள் கூடினால்தான் இதற்கு மதிப்பு..
நட்பும் காதல் தான்..
மோகம் இல்லாத உள்ளம்தான் இதற்கு சிறப்பு…

நட்பு சிலரோடு – சுகமான பயணம்..
கண்ணை மூடிக்கொண்டு தென்றலில் நிற்பதுபோல்..
சிலரோடு – கடினமான பயணம்..
கண்ணை மூடிக்கொண்டு சாலையை கடப்பதுபோல்..

நிபந்தனைகள் எதுவுமின்றி
இங்கு மட்டும் கடவுள் ஒதிங்கிக் கொண்டுவிட்டார்.!
நமக்குச் சரியானவர்களை தேர்ந்தெடுப்பதும்
நாம் சரியானவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதும்

நம் கையில்..!

காதல் பயணங்களில் – 3

7 06 2012

3.ஆசைக்காதல் —>இதுதான் காதல்

கண்கள் எழுதும் கவிதைக்காதல்
கடவுளை மிஞ்சும் உரிமைக்காதல்
மனதை தாக்கும் மன்மதக்காதல்
மற்றதை மறைக்கும் மந்திரக்காதல்

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் இளமைக்காதல்
பார்வைகளால் தொட்டுக்கொள்ளும் பண்புக்காதல்
ஆர்வத்தோடு அணைத்துக்கொள்ளும் அன்புக்காதல்
ஆசையோடு பிணைத்துக்கொள்ளும் மோகக்காதல்

உன்முகம் மட்டுமே எனக்கு முழுநிலவு
உன்னுருவம் மட்டுமே என் உயிர்நிறைவு
உன்னுள்ளம் மட்டுமே என்றும் உற்றதுணை
என் உயிர் காத்திருப்பது உனக்காகவே..
     – என்ற ஆண்மையின் உண்மைதான் காதல்!

என்மனம் உனை உணர்ந்தபின் எனக்கு
எதுவுமே தடை இல்லை அன்பே!
உறவுகள் விலகி இருளே சூழ்ந்தாலும்
உன் விழிசிந்தும் ஒளியே என் கலங்கரைவிளக்கம்!
       – என்ற பெண்மையின் நம்பிக்கைதான் காதல்!

 பெற்றவரின் சாபம் பெற்றேனும்
உற்றவரை கைப்பிடிக்கும் உறுதிக்காதல்!
உயிரே பிரிந்தாலும் உனை பிரியேன்
என்ற உணர்வைத்தரும் உன்னதக்காதல்!

-இதுதான்!
நம் வாழ்க்கைக் காதல்!
சரியான வயதில் சரியான இணையிடம் தோன்றும் காதல்!
ஆசையில் தொடங்கி மோகத்தில் மூழ்கி அன்பில் கரைசேரும் காதல்!

காதல் செய்வதே இணைந்துவாழத்தான் என்ற
உணர்வை தருவதுதான் இதன்வேலை..!
காலங்காலமாய் தோல்விகளின் வலிகளை சொல்லித்தந்தாலும்
ஒற்றை பார்வையில் அதைமறக்க செய்வதே இதன்லீலை..!

இணைந்தால் இனமே அழியுமென தெரிந்தாலும்
இணையத்துடிக்கும் மனம்தான் இதற்குபலம்..!
ஆயினும் என்னுள் ஒரு கேள்வி?
இணைந்தால் மட்டும்தான் காதலா?

இல்லை என்கிறதே இயற்க்கை!
அமைதியான மலைக்கும் ஆர்ப்பரிக்கும் நதிக்கும் காதல்!
“என் அங்கமெல்லாம் ஆடித்திரியும் உனக்கு தெரியாது..
வருவது மலைமுகடு.. பிரிந்து விடுவோம் என்று..
ஆனால் தள்ளிவிடும் எனக்குத் தெரியும்..
வீழ்ந்தால்தானே நீ வியக்கவைக்கும் அருவி!”
                      – பிரிவிலும்கூட காதல் வாழ்கிறது..

காதலும் தண்ணீர் போன்றதுதான்.
கையாள்பவனின் குணத்தை பெறுகிறது..
காதலும் கவிதை போன்றதுதான்..
சரியாக புரிந்தால் மட்டுமே இனிக்கும்..!

கடவுள் கூட காதலை மறுக்கவில்லை!
வெறும் மனிதர்கள் நாம்..
அதையேன் மண்ணில் புதைக்க வேண்டும்..

தொடரும்…

காதல் பயணங்களில் – 1 , 2

19 10 2009

1. அன்புக்காதல் – இதுவும் காதல்!
கல்லில் வடிக்காத சிற்பக்காதல்
காகிதத்தில் வரையாத சித்திரக்காதல்
கல்கி எழுதாத சரித்திரக்காதல்
காவியங்கள் பாடாத உண்மைக்காதல்

அடிமுடி தெரியாத அழகியக்காதல்
ஹார்மோன்கள் வேலையற்ற அற்புதக்காதல்
பொறாமை இல்லாத புனிதக்காதல்
ஆண்பெண் தெரிவில்லாத அமுதக்காதல்.

“உனக்கும் பிடிக்குமே! கேட்போமா?
நம்மை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி!”

என்று சகதோழனையும் துணைக்கு
அழைக்கும் தூய்மையானக் காதல்!
பிரிவே இல்லாத பிரியமான காதல்!
என் வாழ்வில் இதுபோல் இல்லையென
மறுக்க இயலாத காதல்!

-அதுதான்
நம் சிறுவயதுக் காதல்!
நம் ஆசிரியை(யர்) மேல் நாம் கொண்ட
ஒருவித அன்புக்காதல்!
பெற்றோர்களே பெருமையுடன் பேசிச்சிரிக்கும்
பேரின்பக்காதல்!

இத்தனை
சொல்லும்போதும் ஒரு உறுத்தல்..
இந்த அழகான உணர்வை காதல் என்ற
வார்த்தைக்கொண்டா நிரப்ப வேண்டும்?

சரி, போகட்டும் வார்த்தை எதுவாக
இருந்தால் என்ன..!! நம் உள்ளம்
கொள்ளும் உணர்வுதானே முக்கியம்.
நம் தாய்(தந்தை)யிடம் நாம் கொண்ட
உணர்வுக்கு எள்ளளவும் வேறுபட்டதில்லையே..
இது..!

2. கவர்ச்சிக்காதல் – இதுவா காதல்?

சிக்கலில் சிக்க வைத்து சிரிக்கும் காதல்
சிந்தையையும் சேர்த்து சிதைக்கும் காதல்
கானல் நீரில் கால் நனைக்கும் காதல்
கடவுள் வந்தாலும் கண் மறைக்கும் காதல்

ஹார்மோன்களின் அடியாளாகும் காதல்
அரலிப்பூவிலும் தேன்தேடும் காதல்
விளையாட்டுபோல் இருக்கும் விபரீதக்கதல்
ஆசைமட்டுமே கொண்டிருக்கும் அலட்சியக்காதல்

நான் உன்ன விருப்பறேன். நீயும் என்னை
விருப்பித்தான் ஆகனும்”

என்ற கட்டாயத்தை உருவாக்கும் காதல்!
இது மட்டுமே வாழ்க்கை எனக்
கனவுப்பாடம் நடந்தும் காதல்!

– அதுதான்
நம் பதின்ம வயதுக்காதல்!
நம் சக எதிர்பாலினத்தினர் மீது நாம் கொள்ளூம்
ஒருவிதக் கவர்ச்சிக்காதல்.
பெற்றோர்களின் பெருமையை அழிக்கத்துடிக்கும்
சிற்றின்பக்காதல்!

அதனால்
இதை காதல் என்று எப்படிச் சொல்வது?
பதின்ம வயதின் ஈர்ப்பு!
காதல் செய்ய தெரிந்த அளவு காதல்
என்றால் எதுவென்று தெரியாத வயது!

அடிமனதில் ஆர்வங்கள் இருந்தபோதும்
ரகசியமாக ரசித்து, ரகசியமாக சிரித்து
ரகசியமாகவே அதை ஒதுக்கி வைத்து
சிக்கல் இல்லாமல் சிறைமீண்டவர்கள்
பலர் இருப்பினும் மீளத்தெரியாமல்
சிக்கித் தவிப்பவர்களும் சிலர் உண்டு.

கட்டுப்பாடு இல்லாமல் கட்டவிழ்ந்து
ஓடும் கன்றுகுட்டியைப் போல் எதுவும்
புரியாமலே பரபரக்கும் நம்வயது..

ஆபத்தான வாய்ப்பு கிடைத்தாலும் அதுஎன்ன?
என்று பார்த்துவிட துடிதுடிக்கும் நம்மனது..

பரபரக்கும் வயதையும், துடிதுடிக்கும் மனதையும்
கட்டிப்போட கையிறு எதுவும் தேவையில்லை.
கண்காணிப்பு மட்டுமே போதும்..
பெரும்படைகள் எதுவும் தேவையில்லை
நம்பெற்றோர்களே போதும்..

நம்மீது நம்வயது செய்யும் வன்முறைதான்
இந்த காதல்..!
அது தவிர வேரொன்றும் இல்லை
இது..!

-தொடரும்..

புதிய பார்வை..

1 10 2009

இன்று பார்த்த பார்வை
இதுவரை பார்க்கவில்லை!
இன்று தோண்றிய எண்ணம்
இதுவரை தோண்றவில்லை!
இன்று சொன்ன வார்த்தை
இதுவரை சொன்னதில்லை!
உன்னை பற்றி கவிஎழுத
இதுவரை நினைக்கவில்லை!
இன்று எழுத நினைத்தாலும்
வார்த்தைகள் சிக்கவில்லை!
உன்னை கவிதையாய் ரசிக்க
காரணம் தேவையில்லை!
ஆம்… எனக்கு
நீயும் ஒரு கவிதைதான்…
அன்புடன் நான் ரசிக்கும்
அழகான ” HI – KUU ” கவிதை…

எனக்கானது எதுவுமில்லை..

29 09 2009

சொல்ல ஒன்றும் இல்லை
சொல்லிக் கேட்க ஒன்றும் இல்லை
நினைக்க ஒன்றும் இல்லை
நினைத்துப் பார்க்க ஒன்றும் இல்லை
பிடித்தது ஒன்றும் இல்லை
பிடிக்கவும் ஒன்றும் இல்லை
மனமில்லை என்றாலும்
தேடி பார்த்துவிட்டேன்!
எனக்கானது எதுவும் இல்லை..
என் மீது கொண்டிருக்கும்
அந்த நூலிழை நட்பை தவிர…
எனக்கானது எதுவும் இல்லை உன்னிடம்..

————–***—————
%d bloggers like this: