அன்பு x மெளனம்

11 06 2012

என் அன்புக்கு பாத்திரம் நீ…
அளந்து ஊற்ற மனமில்லை..
அப்படியே ஊற்றவா!?..
ஒரு ஒற்றை புன்னகையுடன்
மவுனமாக தலையசைத்தாய்!
:
:
:
ஓ…
அப்படியே ஊற்றியதால் அளவு தெரியவில்லை
சிந்திவிட்டதே என்று சிந்தை கலங்கி நிற்கின்றேன்..
நீயாவது உன் அளவை அதிகரிக்க கூடாதா?

நீர் என்றால் துணிகொண்டு துடைக்கலாம்.
மிஞ்சும் அன்பை எதை கொண்டு துடைக்க..!
நீயாவது உன் அளவை அதிகரிக்க கூடாதா?

ஏன் இந்த மெளனம்…
உன் புன்னகையற்ற முகம் என்னை குழப்புகிறது
மீண்டும் சிந்துமோ என்ற அச்சம் தடுக்கிறது..
நீயாவது என்னை திடப்படுத்தக் கூடாதா?

காட்டில் காயும் நிலவு
அளவில் மிகும் அன்பு
இரண்டுமே ஒன்றுதான்..
வீணென்று தெரிந்தாலும் விழும் இடம் மாறுவதில்லை!
தேவையின்றி விழுந்தாலும் தீர்ந்து போவதில்லை!
ஈடென்று நினைத்து எதை கொடுத்தாலும்
வேண்டும் என்பவர்களுக்கு கிடைப்பதில்லை..
வேண்டாம் என்றவர்களை விடுவதுமில்லை..





பிறந்த நாள் பரிசு..

10 06 2012

உனை சந்தித்த
முதல் வருடம்.. இனிப்பை நீட்டினேன்…!
ஆச்சரியத்துடன் பெற்றுக்கொண்டாய்..!
அனைவருடனும் பகிர்ந்து உண்டாய்..

அடுத்த வருடம்.. இசைக்கருவியை  நீட்டினேன்…!
ஆர்வமுடன் பெற்றுக்கொண்டாய்…!
அடிக்கடி பயன்படுத்தவும் செய்தாய்..

3 – ஆம் வருடம்…
ரோஜாவை நீட்டினேன்..! – மஞ்சள் வண்ணம்!
சிறு புன்னகையோடு பெற்றுக்கொண்டாய்..
சிறிதும்  தயங்காமல் சூடிக்கொண்டாய்..!

4 – ஆம் வருடம்…
ரோஜாவை நீட்டினேன்..! – சிகப்பு வண்ணம்!
அதே புன்னகையோடு பெற்றுக்கொண்டாய்..
சிறு தயக்கத்தோடு கைப்பையில் வைத்துக்கொண்டாய்.!?

வண்ணம் மாறியதன் அர்த்தத்தை
நீயும் கேட்கவில்லை
சூடிக்கொள்ளாததன் காரணத்தை.
நானும் கேட்கவில்லை
இன்றுவரை அதேநிலைதான்…

இது 10  – ஆம் வருடம்…
நான் தரும் பரிசும் மாறப்போவதில்லை..
நீ சிந்தும் புன்னகையும் மாறப்போவதில்லை..
ஆயினும் எனக்குள் ஒரு முள் தைக்கும் வலி..
என் ரோஜாவுக்கு என்றுமே
உன் கைப்பைதான் கல்லறையா?

 “காதலைத்தான் இப்படி சொல்லவேண்டும்” – என்று தெரிந்த உனக்கு
நட்பை எப்படியும் சொல்லலாம் என்று தெரியாமல் போனதேனோ?
என்நட்பின் மீதான உன் நம்பிக்கை வெறும்
வண்ணங்களால் முடிவுசெய்யப்படுகின்றதா?

சொல்லித்தெரிவதில்லை…
இது மன்மதக்கலைக்கு மட்டுமல்ல..!
மற்ற சிலதுக்கும் பொருந்தும்..
அதுவரை நான் தரும் ரோஜாக்களுக்கு
உன் கைப்பையே கல்லறையாக இருக்கட்டும்…





காதல் பயணங்களில் – 4

9 06 2012

4. நட்புக்காதல் – இதுகூட காதல்தான்

காற்றில் கலையும் முடிகளை சரிசெய்து
முன் நெற்றியில் முத்தமிட துடிக்கும் காதல்!
கண்ணோரம் கசியும் கண்ணீர் துடைத்து
கண்ணத்தை ஏந்தி காரணம் கேட்க துடிக்கும் காதல்!

களைத்த முகம் கண்டு கனமும் தயங்காமல்
தோல்சாய்த்து தூங்கச்செய்ய துடிக்கும் காதல்!
வாய்பேச வார்த்தைகளற்ற சில தருணங்களை
உள்ளங்கை பிடித்தே உணரத் துடிக்கும் காதல்!

“நான் வாழும் தருவாயில்
நீ என் அருகில் இருக்கவேண்டும்!
அதை வெற்றிகரமாக வாழ்ந்து பார்க்க..”
“நான் இறக்கும் தருவாயிலும்
நீ என் அருகில் இருக்கவேண்டும்!
அதை அச்சமின்றி எதிர்க்கொள்ள..”
                – மனதை சாய்க்க மடிதரும் காதல் இது!          

யாருக்கும் யவரிடமும் தோன்றும் இக்காதல்..
எப்பொழுதும் எத்தனை முறையும்  வரலாம் இக்காதல்..
பருவ மாற்றங்கள் பாதிக்காத பசுமைக்காதல்
எதிர்ப்பார்ப்புகள் இல்லாத ஏகாந்தக்காதல்.

இங்கு ஒரு கேள்வி எழும்!
நட்பை காதல் என்று ஏன் சொல்வது?

கடவுளுக்கேகூட “காதலாகி கசிந்துருகி ”
என்றபோதுதானே பக்தியின் ஆழம் புரிந்தது..
நமக்குமே “காமம் இல்லாத காதல்”
எனும்போதுதானே நட்பின் ஆழம் புரிகிறது..!

மணம் கொள்ளும் காதலுக்கு மரணம் உண்டு..
மனம் கொள்ளும் காதலு(நட்பு)க்கு அதுவும் இல்லை..
ஆத்மார்த்தமான அன்பிற்கு வேறு என்ன சொல்வது.!?

இதில்தான் நம்மனம் மயக்கத்தில் வீழ்வதில்லை!
மாறாக நம்பிக்கையை எதிர்பார்க்கிறது..

நட்புக்கும் ஸ்பரிசம் தேவை! ஆயினும்
அதை சரியாக ஆளத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படித் தெரியாதவர்களில் முடிவுதான்
நீண்டகால நட்பைகூட காதலில் முடித்துக்கொள்வது!

நட்புக்கும் ஊடல் தேவை! ஆயினும்
அதை சரியாக உணரத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படித் தெரியாதவர்களில் முடிவால்தான்
நீண்டகால நட்புகூட பிரிவில் முடிந்துவிடுகிறது!

நட்பும் காந்தம் தான்..
ஒத்த துருவங்(கருத்து)களிடம்தான் இதற்கு ஈர்ப்பு..
நட்பும் கற்பு தான்..
எண்ணிக்கைகள் கூடினால்தான் இதற்கு மதிப்பு..
நட்பும் காதல் தான்..
மோகம் இல்லாத உள்ளம்தான் இதற்கு சிறப்பு…

நட்பு சிலரோடு – சுகமான பயணம்..
கண்ணை மூடிக்கொண்டு தென்றலில் நிற்பதுபோல்..
சிலரோடு – கடினமான பயணம்..
கண்ணை மூடிக்கொண்டு சாலையை கடப்பதுபோல்..

நிபந்தனைகள் எதுவுமின்றி
இங்கு மட்டும் கடவுள் ஒதிங்கிக் கொண்டுவிட்டார்.!
நமக்குச் சரியானவர்களை தேர்ந்தெடுப்பதும்
நாம் சரியானவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதும்

நம் கையில்..!





காதல் பயணங்களில் – 3

7 06 2012

3.ஆசைக்காதல் —>இதுதான் காதல்

கண்கள் எழுதும் கவிதைக்காதல்
கடவுளை மிஞ்சும் உரிமைக்காதல்
மனதை தாக்கும் மன்மதக்காதல்
மற்றதை மறைக்கும் மந்திரக்காதல்

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் இளமைக்காதல்
பார்வைகளால் தொட்டுக்கொள்ளும் பண்புக்காதல்
ஆர்வத்தோடு அணைத்துக்கொள்ளும் அன்புக்காதல்
ஆசையோடு பிணைத்துக்கொள்ளும் மோகக்காதல்

உன்முகம் மட்டுமே எனக்கு முழுநிலவு
உன்னுருவம் மட்டுமே என் உயிர்நிறைவு
உன்னுள்ளம் மட்டுமே என்றும் உற்றதுணை
என் உயிர் காத்திருப்பது உனக்காகவே..
     – என்ற ஆண்மையின் உண்மைதான் காதல்!

என்மனம் உனை உணர்ந்தபின் எனக்கு
எதுவுமே தடை இல்லை அன்பே!
உறவுகள் விலகி இருளே சூழ்ந்தாலும்
உன் விழிசிந்தும் ஒளியே என் கலங்கரைவிளக்கம்!
       – என்ற பெண்மையின் நம்பிக்கைதான் காதல்!

 பெற்றவரின் சாபம் பெற்றேனும்
உற்றவரை கைப்பிடிக்கும் உறுதிக்காதல்!
உயிரே பிரிந்தாலும் உனை பிரியேன்
என்ற உணர்வைத்தரும் உன்னதக்காதல்!

-இதுதான்!
நம் வாழ்க்கைக் காதல்!
சரியான வயதில் சரியான இணையிடம் தோன்றும் காதல்!
ஆசையில் தொடங்கி மோகத்தில் மூழ்கி அன்பில் கரைசேரும் காதல்!

காதல் செய்வதே இணைந்துவாழத்தான் என்ற
உணர்வை தருவதுதான் இதன்வேலை..!
காலங்காலமாய் தோல்விகளின் வலிகளை சொல்லித்தந்தாலும்
ஒற்றை பார்வையில் அதைமறக்க செய்வதே இதன்லீலை..!

இணைந்தால் இனமே அழியுமென தெரிந்தாலும்
இணையத்துடிக்கும் மனம்தான் இதற்குபலம்..!
ஆயினும் என்னுள் ஒரு கேள்வி?
இணைந்தால் மட்டும்தான் காதலா?

இல்லை என்கிறதே இயற்க்கை!
அமைதியான மலைக்கும் ஆர்ப்பரிக்கும் நதிக்கும் காதல்!
“என் அங்கமெல்லாம் ஆடித்திரியும் உனக்கு தெரியாது..
வருவது மலைமுகடு.. பிரிந்து விடுவோம் என்று..
ஆனால் தள்ளிவிடும் எனக்குத் தெரியும்..
வீழ்ந்தால்தானே நீ வியக்கவைக்கும் அருவி!”
                      – பிரிவிலும்கூட காதல் வாழ்கிறது..

காதலும் தண்ணீர் போன்றதுதான்.
கையாள்பவனின் குணத்தை பெறுகிறது..
காதலும் கவிதை போன்றதுதான்..
சரியாக புரிந்தால் மட்டுமே இனிக்கும்..!

கடவுள் கூட காதலை மறுக்கவில்லை!
வெறும் மனிதர்கள் நாம்..
அதையேன் மண்ணில் புதைக்க வேண்டும்..

தொடரும்…





காதல் பயணங்களில் – 1 , 2

19 10 2009

1. அன்புக்காதல் – இதுவும் காதல்!
கல்லில் வடிக்காத சிற்பக்காதல்
காகிதத்தில் வரையாத சித்திரக்காதல்
கல்கி எழுதாத சரித்திரக்காதல்
காவியங்கள் பாடாத உண்மைக்காதல்

அடிமுடி தெரியாத அழகியக்காதல்
ஹார்மோன்கள் வேலையற்ற அற்புதக்காதல்
பொறாமை இல்லாத புனிதக்காதல்
ஆண்பெண் தெரிவில்லாத அமுதக்காதல்.

“உனக்கும் பிடிக்குமே! கேட்போமா?
நம்மை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி!”

என்று சகதோழனையும் துணைக்கு
அழைக்கும் தூய்மையானக் காதல்!
பிரிவே இல்லாத பிரியமான காதல்!
என் வாழ்வில் இதுபோல் இல்லையென
மறுக்க இயலாத காதல்!

-அதுதான்
நம் சிறுவயதுக் காதல்!
நம் ஆசிரியை(யர்) மேல் நாம் கொண்ட
ஒருவித அன்புக்காதல்!
பெற்றோர்களே பெருமையுடன் பேசிச்சிரிக்கும்
பேரின்பக்காதல்!

இத்தனை
சொல்லும்போதும் ஒரு உறுத்தல்..
இந்த அழகான உணர்வை காதல் என்ற
வார்த்தைக்கொண்டா நிரப்ப வேண்டும்?

சரி, போகட்டும் வார்த்தை எதுவாக
இருந்தால் என்ன..!! நம் உள்ளம்
கொள்ளும் உணர்வுதானே முக்கியம்.
நம் தாய்(தந்தை)யிடம் நாம் கொண்ட
உணர்வுக்கு எள்ளளவும் வேறுபட்டதில்லையே..
இது..!

2. கவர்ச்சிக்காதல் – இதுவா காதல்?

சிக்கலில் சிக்க வைத்து சிரிக்கும் காதல்
சிந்தையையும் சேர்த்து சிதைக்கும் காதல்
கானல் நீரில் கால் நனைக்கும் காதல்
கடவுள் வந்தாலும் கண் மறைக்கும் காதல்

ஹார்மோன்களின் அடியாளாகும் காதல்
அரலிப்பூவிலும் தேன்தேடும் காதல்
விளையாட்டுபோல் இருக்கும் விபரீதக்கதல்
ஆசைமட்டுமே கொண்டிருக்கும் அலட்சியக்காதல்

நான் உன்ன விருப்பறேன். நீயும் என்னை
விருப்பித்தான் ஆகனும்”

என்ற கட்டாயத்தை உருவாக்கும் காதல்!
இது மட்டுமே வாழ்க்கை எனக்
கனவுப்பாடம் நடந்தும் காதல்!

– அதுதான்
நம் பதின்ம வயதுக்காதல்!
நம் சக எதிர்பாலினத்தினர் மீது நாம் கொள்ளூம்
ஒருவிதக் கவர்ச்சிக்காதல்.
பெற்றோர்களின் பெருமையை அழிக்கத்துடிக்கும்
சிற்றின்பக்காதல்!

அதனால்
இதை காதல் என்று எப்படிச் சொல்வது?
பதின்ம வயதின் ஈர்ப்பு!
காதல் செய்ய தெரிந்த அளவு காதல்
என்றால் எதுவென்று தெரியாத வயது!

அடிமனதில் ஆர்வங்கள் இருந்தபோதும்
ரகசியமாக ரசித்து, ரகசியமாக சிரித்து
ரகசியமாகவே அதை ஒதுக்கி வைத்து
சிக்கல் இல்லாமல் சிறைமீண்டவர்கள்
பலர் இருப்பினும் மீளத்தெரியாமல்
சிக்கித் தவிப்பவர்களும் சிலர் உண்டு.

கட்டுப்பாடு இல்லாமல் கட்டவிழ்ந்து
ஓடும் கன்றுகுட்டியைப் போல் எதுவும்
புரியாமலே பரபரக்கும் நம்வயது..

ஆபத்தான வாய்ப்பு கிடைத்தாலும் அதுஎன்ன?
என்று பார்த்துவிட துடிதுடிக்கும் நம்மனது..

பரபரக்கும் வயதையும், துடிதுடிக்கும் மனதையும்
கட்டிப்போட கையிறு எதுவும் தேவையில்லை.
கண்காணிப்பு மட்டுமே போதும்..
பெரும்படைகள் எதுவும் தேவையில்லை
நம்பெற்றோர்களே போதும்..

நம்மீது நம்வயது செய்யும் வன்முறைதான்
இந்த காதல்..!
அது தவிர வேரொன்றும் இல்லை
இது..!

-தொடரும்..





புதிய பார்வை..

1 10 2009

இன்று பார்த்த பார்வை
இதுவரை பார்க்கவில்லை!
இன்று தோண்றிய எண்ணம்
இதுவரை தோண்றவில்லை!
இன்று சொன்ன வார்த்தை
இதுவரை சொன்னதில்லை!
உன்னை பற்றி கவிஎழுத
இதுவரை நினைக்கவில்லை!
இன்று எழுத நினைத்தாலும்
வார்த்தைகள் சிக்கவில்லை!
உன்னை கவிதையாய் ரசிக்க
காரணம் தேவையில்லை!
ஆம்… எனக்கு
நீயும் ஒரு கவிதைதான்…
அன்புடன் நான் ரசிக்கும்
அழகான ” HI – KUU ” கவிதை…





எனக்கானது எதுவுமில்லை..

29 09 2009

சொல்ல ஒன்றும் இல்லை
சொல்லிக் கேட்க ஒன்றும் இல்லை
நினைக்க ஒன்றும் இல்லை
நினைத்துப் பார்க்க ஒன்றும் இல்லை
பிடித்தது ஒன்றும் இல்லை
பிடிக்கவும் ஒன்றும் இல்லை
மனமில்லை என்றாலும்
தேடி பார்த்துவிட்டேன்!
எனக்கானது எதுவும் இல்லை..
என் மீது கொண்டிருக்கும்
அந்த நூலிழை நட்பை தவிர…
எனக்கானது எதுவும் இல்லை உன்னிடம்..

————–***—————





மன்மத லீலை..

25 09 2009

மன்மத லீலை என்ற வார்த்தையை கேட்டால் அவரவர்களுக்கு ஆயிரம் கற்பனைகள் தோண்றும். அது ஒருவரின் அந்தரங்க மனது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறது என்பதை பொறுத்து அதன் கற்பனை தரம் இருக்கும். அந்த லீலைகளை ரசனையுடன் கையாள்பவர்களும் உண்டு, கவர்ச்சியாக கையாள்பவர்களும் உண்டு, காமம் மட்டுமே பிரதாணமாக கொண்டவர்களும் உண்டு,அதைவிட ஒரு படி மேலே விலங்குகளைப் போல் நடந்துகொள்பவர்களும் உண்டு.

இக்காலத்தில் மிக தெளிவாக “எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்தானப்பா” என்று சொல்லிக்கொள்ளும் இதே விசயத்தை மன்மதன் எனும் தேவனின் செயலாக உருவகப்படுத்தி நம் முன்னோர்கள் தனி இலக்கணங்களே வகுத்துவிட்டார்கள்.. அப்படி சொல்லபட்டதாக சமீபத்தில் படித்த சில..

காளிதாசன் – குமாரசம்பவம் – இந்திரன் சொல்வதாக..
“மன்மதா, என் வஜ்ராயுதத்தையும் உன்னையும் சமமாகவே கருதுகிறேன். இன்னும் பார்க்கப் போனால் வஜ்ராயுதத்தைவிட நீ உயர்ந்தவன். வஜ்ராயுதத்தை முனிவர்களிடம் உபயோகிக்க முடியாது. உன்னை மாமுனிவர்களிடமும் உபயோகிக்கலாம். நீ எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்புபவன்!”

“மன்மதா! நீ இல்லாதபோது மதுவில் மயங்கிய பெண்கள் செய்கிற செயல்கள் நகைப்பையே உண்டாக்கும். மது மயக்கத்தைவிடவும், நாணத்தில் சிவந்த கண்களுடன் முற்றுப் பெறாத வார்த்தைகளை, காதலுடன் ஒரு பெண் குழைந்து சொல்வதில் அதிக போதையுண்டு! ஆதலால் மன்மதா! நீயில்லாதபோது மது மயக்கம்கூட எந்த மனதையும் பரவசப்படுத்தாது.”

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – ஆண்டாள் சொல்வதாக..
“மன்மதா, வானவர்க்காக முனிவர்கள் வகுத்த யாகத்தை காட்டிலுள்ள நரிகள் சூழ்ந்து தாண்டுவதும், முகர்ந்து பார்ப்பதும் எத்தனை கொடுஞ்செயலோ அத்தனைக் கொடியது – சங்கு சக்கரதாரியான மாதவனுக்காக சிருஷ்டிக்கப்பட்ட என் அங்கங்கள் – அற்பமான மானிடவர்க்கென்று பேசப்படுவது. இதை கேட்டதிலிருந்து வாழ விருப்பமில்லாது இருக்கிறேன் நான் என்று போய் சொல்!”

ஹர்ஷவர்த்தனர் – தன் கவிதையில்
“மன்மதா, உன்னை வாசலுக்கு வெளியே நிற்கச் சொல்பவர்கள் பொய்யர்கள். மோக தாகமெடுத்த உடலுக்கு உன் மொழி தவிர வேறு மொழி புரியாது.”

குற்றாலக் குறவஞ்சி –
” நேரிழையாரையும், ஊரையும் பாரடா மன்மதா! கண்ணில் நித்திரை தானொரு சத்துருவாச்சுதே மன்மதா! அட மன்மதா!”

நாராயண பட்டர்
“மன்மதா..
இந்தக் கண்ணன் சிறு பிள்ளை. என் காதலியை இவனது சந்நிதியில் வைத்து சல்லாபிக்கக் கூடாதாம்! நீயும் இவனும் இல்லாத இடம்தான் எது சொல்லேன்!”

கோபாலகிருஷ்ண நம்பூதிரி – ரதி புராணம்
“மன்மதா!
நீ மறைந்து நிற்கிறாய்.
அவள் மயங்கி நிற்கிறாள்.
போதை தலைக்கேற,
புதுக்கனிகள் சுவைக்க,
காதல் விளையாட்டுக்கென –
இலக்கணம் வகுத்தவனே!
எங்கு போனாய்!
வா!”

அஜாத சத்ருவில்
“மன்மதா,
உன்னிடம் ஒரு வேண்டுகோள்!
நான், என் மனைவியுடன்
இருக்கும்
நேரத்தில் மட்டும்
உன் பானத்தை வீசு!
மற்ற நேரங்களில்…
கண் மறவாய் இரு.
இல்லற தர்மத்திலிருந்து
என்னை நழுவச் செய்யாதே!
உனக்கு அனந்தகோடி
நமஸ்காரங்கள்!

———————————–***———————————–





இதுவரை சொன்னதில்லை..

21 09 2009

எனக்கு புத்தகங்களின் மேல் ஏன் இவ்வளவு ஆவல்? இதன் தொடக்கம் எப்போது ஆரம்பித்தது? யோசித்து பார்த்தேன்..

அய்யய்யோ.. நிறைய உண்மைங்க வெளிவரும்போல இருக்கே.. சரி ஆரம்பிச்சாச்சி.. முடிச்சிடறேன்..

என்னோட மணி அண்ணன், வேணு அண்ணன் இரண்டு பேருமே அப்ப காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க.. நான் 6 – ஆவது படிச்சிட்டு இருந்தேன். என்னடா இது, இவ்வளவு வயசு வித்யாசமானுதானே யோசிக்கறீங்க.. அவங்க ரெண்டுபேருமே என் அப்பாவோட தம்பிகள்தாங்க. என்னோட அத்தை அவங்கள அண்ணா,அண்ணான்னு கூப்பிடறத பாத்து நானும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சி விவரம் தெரிஞ்ச பின்னாலும் மாத்திக்க முடியாம அதுவே பழகிடுச்சிங்க..

6 – வது முழு ஆண்டு தேர்வு நடக்க ஆரம்பித்த நேரம் அது. அப்பதான் அண்ணன்களும் லீவ்ல ஊருக்கு வந்தாங்க. எனக்கு கணக்கு போட்டு பார்க்க ஒரு நோட் தேவைபட்டது. சரி அவங்க அலமாரில ஏதாவது இருக்குமான்னு தேடப் போனேன். அங்கதான் முதன்முதலா மினுமினுப்பான அட்டைகளோட குட்டி குட்டியா (துப்பறியும் நாவல்) நெறைய புத்தகங்கள பார்த்தேன்.மேலயே இருந்த ஒரு புக்கோட அட்டைபடம் வேற அழகான முயல் படம் போட்டிருந்ததா..! அந்த மாதிரி புத்தகங்களை அதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லீங்க. ஆனா அது அண்ணனங்களோட காலேஜ் புத்தகம் இல்லேன்னு மட்டும் கண்டுபிடிச்சிட்டோமில்ல! 🙂

நான் அப்ப இருந்தது ஒரு கிராமத்துல தாத்தா பாட்டியோட, அதிலும் வசதிகள் இருந்தாலும் படிச்சவங்க யாரும் பக்கத்துல கிடையாதா.. படிக்கற புத்தகங்கள் தவிர வேற எதையும் பார்க்க படிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. தாத்தா கடைக்கு போய் எதாவது பொருள் வாங்கிட்டு வந்தா எனக்கு என்ன வாங்கி இருக்காங்கன்னு பார்க்கறேனோ இல்லையோ? அத கட்டி குடித்த பேப்பர்லதான் என் கண்ணு இருக்கும். அதுல என்னென்ன இருக்கோ அத்தனையையும் புரியலனாலும் படிச்சிடுவேன். அப்ப தான் எனக்கு தூக்கமே வரும்.

இத பார்த்ததும் ஒரே சந்தோசம். சரி எடுத்து பார்க்கலாம்னு கையை வச்ச நேரம் பார்த்தா மணீ அண்ணா வரனும். “என்ன வேணும்மா” ன்னு கேட்டாரு.. “நோட்டு ஒன்னு வேணும்ணா”ன்னு சொல்லிட்டு நாவல்களை காட்டி “இதெல்லாம் என்ன புக்ணா” ன்னு தெரியாத மாதிரி கேட்டேன். அதுக்கு “இதெல்லாம் பெரியவங்க படிக்கற புக்மா, உனக்கு புரியாது, நீ போய் படி” ன்னு சொன்னத கேட்டு புக்க பாத்துக்கிட்டே ” ஏன் நான் படிச்சா என்ன? நானும் பெரிய பொண்ணுதானே.. ஸ்கூல் – ல நாந்தான் கொடிப்பாட்டு பாடறேன், தெரியுமா? ன்னு கேக்கறேன். பின்னாடி சத்தமே இல்ல. அப்புறம்தான் தெரிஞ்சது அவரு அப்பவே போய்ட்டாருன்னு.

எனக்கு மூக்குமேல கோபம் வந்துருச்சி, அதெப்படி எனக்கு புரியாம போகும் ? நானுந்தான் கிளாஸ்ல பெஸ்டு ஸ்டூடண்ட், என்ன.. இங்லீஷ் தான் சரியா படிக்க தெரியாது, இது தமிழ்தானே ஏன் புரியாது? அப்படி என்ன இருக்கு அதுல? படிக்காம விடறதில்லைன்னு முடிவு செஞ்சி… முடிவு செஞ்சி.. ஒன்னே ஒன்ன மட்டும் சுட்டுகிட்டு வந்துட்டேன்.

நான் வழக்கமா படிக்கற வேப்பமரத்து நிழல்ல ஒக்காந்து அட்டைய சந்தோசமா பார்த்துட்டு படிக்கலாம்னு புக்க பிரிச்சி பார்த்தா எழுத்தெல்லாம் தலைகீழா இருக்கு.. அப்பதான் தெரிஞ்சது அதுவரைக்கும் நான் பின் அட்டையத்தான் பார்த்திருக்கேன்னு..அட சேன்னு தலைல அடிச்சிக்கிட்டு முன் அட்டைய திருப்பி பார்க்கறேன்.. இஈஈஈஈஈஈ… ன்னு ஒரு கொரங்கு இளிச்சிட்டு ஒக்காந்திருக்கு.ஒரு ஆளு வேற ரெத்தத்தோட பயந்துகிட்டு படிகட்டுமேல ஓடரமாதிரி படம் போட்டு இருக்கு. அப்படியே ஒரு நிமிசம் திக்குன்னுதான் இருந்தது. ஆனாலும் அதபடிக்காம விடமாட்டோமில்ல! 🙂 அதுவும் கொரங்கு கதைவேற..!

அந்த நேரத்துலையும் ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது.

படிக்கும்போதே ஒரே யோசனைதான். ஒரு எடத்துலகூட குரங்கே வரமாட்டேங்குதேனு.. ஆனாலும் பிடிவாதமா ஒரு 20,25 பக்கம் படிச்சதுக்கப்புறம் தாங்க புரிஞ்சது, புக்கோட ஹீரோவே அந்த கொரங்குதான். பக்கத்துக்கு பக்கம் அது பேர்தாங்க. அது பேரு சிம்பன்சி. சிம்பன்சின்னு இருந்ததால அது யாரோ ஒரு ஆள் பேர்ன்னு..ஹி..ஹி.. 🙂

இதுல என்ன காமெடினா ஓ.. அந்த புக்ல வர கொரங்குக்கு சிம்பன்சின்னு பேர் வெச்சிருக்காங்க போல இருக்குன்னுதாங்க நினைச்சேன். கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம்தாங்க சிம்பன்சின்னு ஒரு கொரங்கே இருக்குன்னு தெரிஞ்சது.

ஏதோ உறுத்தல்னு சொன்னேனில்லையா.. “அந்த அட்டைப்படத்துல இருக்கற கொரங்க ஏன் இவ்வளவு அசிங்கமா போட்டிருக்காங்க. கருப்பா இவ்வளவு முடியோட இருக்கே. கொரங்கு கொஞ்சம் அழகாத்தானே இருக்கும்”. ன்னு தோணிட்டே இருந்தது. அப்புறம் தானே தெரிஞ்சது.. கொரங்குக்கெல்லாம் கொள்ளுத்தாத்தா கொரங்கு இவருதான்னு. இந்த சார் பேர்தான் சிம்பன்சின்னு. ஆனாலும் சார் எப்பவுமே கொஞ்சம் அழகுதான் இல்லீங்க..! அதுவும் சிரிக்கும்போது அப்பப்பா….

அப்புறம் அந்த புக்க என் பைகுள்ளையே வெச்சிட்டு இருந்தேனா.. கணக்கு பரிட்சை அன்னிக்கு மணி அண்ணா சொல்லிகொடுக்க என்கிட்ட வந்து ஒக்காந்தாங்களா.. எப்பவும் போல நான் புக் எடுக்க பையை எடுத்தேனா.. அவரு பார்த்துட்டாரு.. பார்த்ததும் கொபம் வந்திருச்சிபோல இருக்கு.. சுத்திமுத்தி பார்த்துட்டு நங்’னு என் தலமேல ஒரு கொட்டு வெச்சிட்டாரு. நான் வழக்கம்போல சத்தமா அழுதேனா.. (அப்படி அழுதாத்தான் புயல்மாதிரி பாட்டி, தாத்தா யாராவது வருவாங்க, வந்து அண்ணன நல்லா திட்டிட்டு என்னைய எதாவது சாப்ட கூட்டிட்டுபோயிடுவாங்க.. அண்ணன் தலைல அடிச்சிக்கும். அவளை செல்லம் குடுத்து கெடுக்காதீங்கன்னு சொல்லிட்டே எழுந்து போயிடுவாரு. அப்பாடின்னு இருக்கும். பின்ன என்னங்க.. எது தெரியாத கணக்கோ அத தாங்க போடச்சொல்லி தெரியலன்னு திட்டுவாரு. தெரிஞ்சத போட சொல்லவே மாட்டாரு.. கோபம் வருமா வரதா.. நீங்களே சொல்லுங்க..) அட! யாருமே வரவே இல்லீங்க. பக்கத்துல யாருமே இல்லன்னு கன்பார்ம் பன்னிட்டுதான் அடிச்சே இருக்காருன்னு அப்புறமாதானே புரிஞ்சது.

அப்புறம் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்ததும் சமாதானப்படுத்தர மாதிரி, “பரிட்சை எல்லாம் முடிஞ்சதும் நீ எடுத்து படிச்சா யாரு வேண்டாம்னு சொன்னது” னு சொல்லிட்டு கண்ண தொடச்சிவிடாரா.. ” நீங்கதான் அதுக்குள்ள எடுத்துட்டு போயிடுவீங்களே” னு அழுதுட்டே சொன்னதும் என்ன நெனச்சி சிரிச்சாருன்னு தெரியல.. சிரிச்சிட்டே “இல்ல, எல்லாத்தையும் இங்கயே வெச்சிட்டு போறேன்”னு சொல்லிட்டு எழுந்துபோய்ட்டாரு..

ஒருவாரம் எப்படா இந்த பரிட்சை எல்லாம் முடியும்னு அலுத்துக்கிட்டே எழுதி முடிச்சிட்டு மதியம் வந்ததும் வராததுமா எல்லாத்தையும் எடுத்து என் எடத்துல அடுக்கி வச்சிட்டுதான் சாப்பிடவே போனேன். அப்புறம் ஒவ்வொன்னா எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். அடித்த ஆறுமாசம் அண்ணா லீவ்ல வர வரைக்கும் அதையெல்லாம் திரும்ப திரும்ப எத்தனை முறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது. அதுதான் என்னோட ஆரம்பம்.. புத்தகம் படிக்க எனக்கு பிடிக்கும்னு எனக்கே தெரியவச்ச ஒரு சின்ன நிகழ்ச்சிதான் இது. நிகழ்ச்சி சின்னதா இருந்தாலும் என் வாழ்க்கைல இது ரொம்ப முக்கியமான நிகழ்ச்சி.

இதுக்கு முதல் காரணமான என் அண்ணாவுக்கு இதுவரைக்கும் நான் ஒரு நன்றி கூட சொன்னதில்லையேன்னு இப்ப தோணுது . இனிமேல் சொல்ல முடியுமான்னும் தெரியல.. ஏன்னா எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும்னோ, கொஞ்சம் எழுதவும் செய்வேன்னோ என் அண்ணாக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏதாவது சந்தர்பத்தில் இந்த பதிவை எப்பவாவது படிக்கற வாய்ப்பு இருந்து அவரும் இதை படிச்சார்ன்னா நிச்சயமா என்னோட உணர்வை புரிஞ்சிப்பாருன்னு நினைக்கிறேன்.

ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா!
எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினதுக்கு..





உன் வரவு.. நல்வரவு!

15 09 2009

மெத்தென்ற பட்டுஇழை முடிகள்..
சின்னப்பிறை நெற்றி.. சிறுவண்டுக் கண்கள்..
பூஞ்சிட்டு மூக்கு.. ரோஜாப்பூ கண்ணங்கள்..
சொப்புவாய் இதழ்கள்.. சிறுசங்கு கழுத்து..
கீரைத்தண்டு கைகள்.. அல்லிப்பூ விரல்கள்..
பிறைநிலா நகங்கள்.. இளந்தாமரை தண்டு உடல்..
இளங்குருத்து கால்கள்.. அந்திப்பூ விரல்கள்..
அவரைப்பூ நகங்கள்.. இலவம்பஞ்சு பாதங்கள்..
இத்தனையும் வைத்து கட்டி
சந்தனமும் பண்ணீரும், இளம்ரோஜா இதழ்களையும்
சேர்தரைத்த குழம்பெடுத்து மேலெங்கும் பூசிவைத்து
செய்தெடுத்த சிற்பமொன்று உயிர்கொண்டு
அன்னைமடி உறங்குதடி..
உறக்கம் கலைந்தாலும் அச்சுகமே பெறவேண்டி
உறங்குவதுபோல் நடிக்குதடி!

உறங்கியது போதும் கண்ணா!
உனக்கான உலகம் படைக்க வருவாய்..
அன்னையின் சிறுவயிற்றில் ஆடியது போதும் கண்ணா..
தந்தையின் தோல்களிலும் தொற்றிக்கொள்ள வருவாய்..
உன் முகம் காணவும் உன் குரல் கேட்கவும்
காத்திருக்கும் எங்களுக்கு தயைக்காட்டி வருவாய்..

ஆலிழைக் கண்ணனாக ஆயிரம் லீலைகள்புரிய
ஆலவட்டம் ஆடிக்கொண்டு அனைவரையும் ஈர்க்க
உன் சின்ன பாதம் கொண்டு இப்புவியையும் அளக்க
உன் அன்னைமேல் கருணை கொண்டு அப்பா நீ வருக!

புத்தம்புது பூஞ்சிறகே வருக..
பூத்துவிரியும் மலர்மொட்டே வருக..
வெட்டியெடுத்த கட்டிப்பொன்னே வருக..
கொட்டிஅளந்த கொற்க்கை முத்தே வருக..
மணி கர்ப்பத்தில் சுமந்த அன்னைமுகம் காண
மன கர்ப்பத்தில் சுமந்த தந்தைமுகம் காண
கண்ணே நீ வருக! கண்மணியே நீ வருக!